16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி, விடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டவர்களை காவல்துறை தேடி வருகிறது.
உத்தர பிரதேசத்தின் மதுரா அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், கடந்த 11-ஆம் தேதி அப்பகுதியிலுள்ள தோட்டத்துக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், தோட்டத்தில் நிற்கும் சிறுமியை கண்ட பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் ராம் ஆகிய இரு இளைஞர்கள், அந்த சிறுமியிடம் நட்பாக பழகியதுடன் சிறுமிக்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருப்பதை அறியாமல் அதனை வாங்கிக் குடித்த சிறுமி மயக்கமடைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, இளைஞர்கள் இருவரும் சிறுமியுடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.
மனிதத்தன்மையற்ற இந்த செயலை, அவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் படம்பிடித்ததுடன், அந்த விடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டுக்குத் திரும்பியதும் தனது தாயாரிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதனைத்தொடர்ந்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடைப்படையில், இவ்விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதாக காவல்துறை அதிகாரி சஞ்சீவ் காந்த் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரு இளைஞர்களும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.