சிறுவயதில் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக, விமானம் தாங்கி கப்பல் கட்டுவதற்காக தனது சேமிப்பைக் கொடுத்த ஒருவருக்கு, 26 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அரசு அவரை நேரில் அழைத்து கௌரவித்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தெற்கு சீனாவைச் சேர்ந்த சென் யூவென் என்ற நபர், தனது ஐந்து வயதில் விமானம் தாங்கி கப்பல் கட்டும் திட்டத்திற்கு 140 யுவான் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
அவரது தேசப்பற்றுக்கு மதிப்பளித்து, தற்போது சீன அரசு அவரை கடற்படை தளத்திற்கு அழைத்து, ஒரு நினைவுப் பரிசையும் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
குவாங்சி மாகாணத்தில் உள்ள சின்ஷோ நகரைச் சேர்ந்தவர் சென் யூவென். இவரது தந்தை ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பதால், சென் யூவெனுக்கு சிறுவயதிலிருந்தே ராணுவம் மற்றும் தேசப் பாதுகாப்பு மீது மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது.
1999ஆம் ஆண்டில், அவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது, சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் கட்டுவதற்கு நன்கொடை வழங்குவது குறித்து அவரது தந்தையும் நண்பர்களும் பேசுவதைக் கேட்டிருக்கிறார்.
உடனே சென் யூவென் தனது சேமிப்பான 140 யுவானை, தந்தை உதவியுடன் சீன ராணுவத்தின் பொது ஆயுதத் துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு ஒரு பதிலும் வந்திருக்கிறது.
அவரது நன்கொடை விதிமுறைகளின்படி திருப்பி அனுப்பப்பட்டதுடன், தேசப் பாதுகாப்பிற்கான அவரது ஆதரவைப் பாராட்டி ஒரு வாழ்த்து அட்டையும் அனுப்பப்பட்டிருக்கிறது.