பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யு டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
பெரியவர்கள் மட்டுமன்றி, குழந்தைகளும் சிறுவர்களும் தற்போது சமூகவலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். சமூக வலைதளங்களால் சிறுவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.அதைத்தொடர்ந்து பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. டென்மார்க், நார்வே, மலேசியா போன்ற நாடுகளும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது: வயது அடிப்படையில் கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து பல்வேறு சமூக வலைதள நிறுவனங்களுடன் அரசு ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
ஒவ்வொரு நாட்டின் கலாசார சூழலையும் பன்னாட்டு நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும். டீப்ஃபேக் காணொலிகளைக் கண்டறிந்த 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகள் ஏற்கெனவே அமலில் உள்ளன. தற்போது ‘டீப்ஃபேக்’ எனப்படும் போலி காணொலிகள் மற்றும் வயதுக் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
