சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது தமிழகம்: சு.வெங்கடேசன் எம்.பி | MP Venkatesan says that Tamil Nadu government is guiding India in promoting small and medium enterprises

1318272.jpg
Spread the love

மதுரை: சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (ஸ்டார்ட்அப் தமிழ்நாடு) சார்பில் ‘தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழாவின் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்தார். புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க தலைமை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் முன்னிலை வகித்தார்.

இதற்கு தலைமை வகித்து அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் பேசியது: “இந்தியாவில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் 9 ஆயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 25 சதவீதம் பெண் தொழில்முனைவோர்கள். இந்தியாவில் உழைக்கும் பெண்களில் தமிழகப் பெண்கள் முதலிடத்தில் உள்ளனர். சமச்சீரான வளர்ச்சி என்பது தமிழக அரசின் நோக்கமாக உள்ளது. அதற்காக தொழில் வளர்ச்சி, தொழில்முனைவோர்களை ஏற்படுத்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தமிழக அரசு இந்தியாவில் முதல்முறையாக ஏற்படுத்தியுள்ளது. அதன் மூலம் மாநிலம் முழுவதும் சமச்சீர் வளர்ச்சி ஏற்படுத்தப்படுகிறது. இதற்கு வழிகாட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் 10 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் சிறப்புரையில் பேசியது: “இந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தோடு நடத்தப்பட்ட வணிகத்தின் அடையாளமாக இன்றளவும் நாணயங்கள் கிடைத்துவருகின்றன. இந்தியாவில் கிடைத்த நாணயங்களில் 80 சதவீதம் நாணயங்கள் தமிழ்நாட்டில்தான் கிடைத்திருக்கிறது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வணிகம் செய்த நிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் கிடைத்த நாணயங்களில் 60 சதவீதம் வைகை நதிக்கரையில்தான் கிடைத்திருக்கிறது.

வணிகத்தின் ஆதி சத்தம் எதிரொலித்த இடத்தில் இந்த ஸ்டார்ட்அப் திருவிழா நடக்கிறது. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு எனும் சிந்தனை நம்மை வழிநடத்தும் சிந்தனை. செய்யும் தொழிலே தெய்வம் என்று தொழிலை உச்சத்தில் வைத்த மரபு நமக்கிருக்கிறது. அந்த மரபின் தொடர்ச்சியாக இந் நிகழ்ச்சி நடக்கிறது. மிகப்பெரும் தொழில் நிறுவனங்களை விட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் இந்த சமூகத்தை வழிநடத்திச் செல்வதில் பெரும்பங்காற்றுகிறது.

இதில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் 8 சதவீதம் ஜிபிடியிலும், ஏற்றுமதியில் 40 சதவீதமும், உள்நாட்டு தொழில் உற்பத்தியில் 45 சதவீதமும் பங்களிக்கிறது. உள்நாட்டில் 12 கோடி பேருக்கு வேலை கொடுக்கிறது. அந்த வகையில் சிறுகுறு நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. தமிழக அரசும் சிறுகுறு நடுத்தர தொழில்களை ஊக்குவித்து வருகிறது. உலகத்தின் ஓட்டத்திற்கு இணையாக ஓடும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழக அரசும் வணிகத் துறை சார்பில் ஒரு வலிமையான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது” என்றார்

இவ்விழாவில், சிஐஐ தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம், மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், நபார்டு முதன்மை பொது மேலாளர் ஆர்.ஆனந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால் ஆகியோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *