மகாராஷ்டிராவில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் மாணிக்ராவ் கோடே. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்ராவும், அவரது சகோதரரும் 30 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் வறுமைகோட்டிற்கு கீழே வசிப்பதாக கூறி அரசிடமிருந்து வீடு வாங்கினர். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நாசிக் செசன்ஸ் கோர்ட் இருவருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது. இத்தண்டனையை தொடர்ந்து கோர்ட்டில் மாணிக்ராவும், அவரது சகோதரர் விஜயும் தாங்கள் போலீஸில் சரணடைய நான்கு நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறி நாசிக் கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இம்மனு நீதிபதி ரூபாலி முன்பு விசாரணைக்கு வந்தது. மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு 4 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. உடல் நிலை சரியில்லை என்பதற்கு ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா என்று நீதிபதி கேட்டார்.
அதற்கு இப்போதுதான் அமைச்சர் மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். ஒரு மணி நேரத்தில் ஆவணங்களை தாக்கல் செய்வதாக அமைச்சரின் வழக்கறிஞர் மனோஜ் தெரிவித்தார். ஆனால் மாணிக்ராவ் மற்றும் அவரது சகோதரர் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு இருப்பதால் சரணடைய கால அவகாசம் கொடுக்க முடியாது என்று கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.
அமைச்சருக்கும், அவரது சகோதரருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்தார். வழக்கு விசாரணைக்கு வரும்போது அமைச்சர் மாணிக்ராவ் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். கைது வாரண்டை தொடர்ந்து ஜாமீன் கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக மாணிக்ராவ் வழக்கறிஞர் அனிகேத் நிகம் தெரிவித்தார். இம்மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. அதுவரை கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மாணிக்ராவ் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் என்கிறார்கள்.
இது குறித்து நாசிக் போலீஸ் கமிஷனர் சந்தீப் கூறுகையில், “‘அமைச்சர் மாணிக்ராவ் மற்றும் அவரது சகோதருக்கு எதிரான கைது வாரண்ட் எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்”என்றார். இருவரும் எங்கு இருக்கின்றனர் என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மற்றொரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.