2003-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான கதிரவன், கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அந்தக் கைதி தப்பித்து ஓட, அவரைப் பிடிக்கும் முயற்சியில் சுட்டு விடுகிறார். அதில் அக்கைதி இறந்துபோக, கதிரவன் மீது விசாரணை பாய்கிறது.
இந்த நெருக்கடிக்கிடையில், கொலை வழக்கில் விசாரணை கைதியாக இருக்கும் அப்துல் ராவூஃப் என்ற இளைஞரை, வேலூர் சிறையிலிருந்து மற்றொரு மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வேலை வருகிறது.
இந்தப் பயணத்தில், அப்துல் ராவூஃப் யார், அவர் குற்றவாளியானது எப்படி, இறுதியில் இருவருக்கும் என்ன நேர்கிறது என்பதே அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியின் “சிறை’ படத்தின் கதை.

தன் திறன் மீதான தன்னம்பிக்கை, சட்டத்தின் முன் நேர்மை, கோபத்தை அடக்கி வைக்கும் தருணம், பிறருக்காக மனமிறங்கும் தருணம் என முழுக்க முழுக்க முதிர்ச்சியான அணுகுமுறையைக் கோரும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் விக்ரம் பிரபு.
படம் முழுவதும் பரிதாபத்தைக் கோரும் கதாபாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார்.