தென் அமெரிக்க நாடான சிலியில் வியாழக்கிழமை பயங்கர நிலநடுக்கம் நேரிட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவாகியுள்ளது.
தென் அமெரிக்க நாடான சிலியில் வியாழக்கிழமை பயங்கர நிலநடுக்கம் நேரிட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது கடற்கரை நகரமான ஆண்டோபகாஸ்டாவிலிருந்து கிழக்கே 265 கிலோ மீட்டர் தொலைவில் நேரிட்டதாகவும், இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 128 கிலோ மீட்டர் அளவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி, வியாழக்கிழமை இரவு 9.51 மணிக்கு நேரிட்டுள்ளது. இதுவரை சேத விவரங்கள் எதுவும் தெரியவரவில்லை.
இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று ஏஎஃப் செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகிலேயே, நிலநடுக்கம் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக சிலி உள்ளது. பசிபிக் பெருங்கடலின் ரிங் ஆஃப் பையர் என்று அடையாளம் காணப்படும் பகுதியில் சிலி அமைந்துள்ளது. இங்கு அதிகப்படியான எரிமலை சீற்றங்களும், நிலநடுக்கங்களும் நிகழ்வது வாடிக்கை.
உலகிலேயே இதுவரை நேரிட்ட நிலநடுக்கங்களில் அதிகபட்சமாக 1960ஆம் ஆண்டு தெற்கு நகரமான வால்டிவியாவில் நேரிட்ட நிலநடுக்கம்தான் கூறப்படுகிறது. இது ரிக்டர் அளவில் 9.5 ஆகப் பதிவாகியிருந்தது.
அதன்பிறகு, 2010ஆம் ஆண்டு 8.8 ரிக்டர் அளவில் நேரிட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 500 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.