‘சிலை திருட்டு வழக்கு ஆவணங்களை பாதுகாக்க தவறிய அதிகாரி மீது நடவடிக்கை’ – அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை | Kadeshwara Subramaniam talks on idol theft case

1344231.jpg
Spread the love

சென்னை: கோவில் சிலை திருட்டு வழக்கு ஆவணங்களை பாதுகாக்க தவறிய காவல் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் ₹300 கோடி மதிப்பிலான 41 சிலைகளை கடத்திச் சென்ற வழக்குகளில் உள்ள ஆவணங்கள் காவல் நிலையங்களில் இருந்து காணாமல் போய் உள்ளன. இது சம்பந்தமான வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் தமிழக அரசை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆலயங்களை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலைத்துறை ஆலயத்திற்கு வரும் பக்தர்களிடம் பணம் வசூல் செய்வது மட்டுமே நோக்கமாக செயல்பட்டு வருகிறது. ஆலயங்களையோ ஆலயங்களில் உள்ள சிலைகளையோ பாதுகாக்கும் எண்ணம் துளி அளவும் இல்லை. அதன் காரணமாகத்தான் பல ஆலயங்களில் உள்ள சிலைகள் திருடு போய் அவை இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையிலேயே இருந்து வருகிறது.

சிலைகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள தமிழக அரசும் தமிழக காவல்துறையும் இதனை நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையும் மெத்தனமாக இருந்து வருவதை விட அதனைக் கண்டுபிடிக்க போடப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள் காவல் நிலையத்திலேயே காணாமல் போயுள்ளது என்ற அவலம் அரங்கேறி இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயமாகும்.

தமிழக அரசாலும் , காவல்துறையாலும் வழக்கு ஆவணங்களையே பாதுகாக்க முடியவில்லை என்றால் எப்படி இவர்கள் ஆலயத்தையும், ஆலய சிலைகளையும் பாதுகாப்பார்கள். தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் சிலை திருட்டு வழக்கில் உள்ள ஆவணங்களை பாதுகாக்க தவறிய காவல்துறை அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் மெத்தனமாக இருந்த தமிழக அரசையும் இந்து சமய அறநிலைத்துறையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *