சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூர் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூர், வெளிமாநிலங்களுக்கு ரயில்களில் பயணிப்போருக்கான முன்பதிவு 60 நாள்களுக்கு முன்பு தொடங்குவதை தெற்கு ரயில்வே வழக்கமாகக் கொண்டுள்ளது.
அதன்படி, அக்.20- ஆம் தேதி தீபாவளியையொட்டி, 2 நாள்களுக்கு முன்பே சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கான முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அக்.17- ஆம் தேதி ஊர்களுக்குச் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்ததால், பயணிகள் பலர் ஏமாற்றமடைந்தனர்.
குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 5 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்தது.