சில நிமிடங்களில் முடிந்த பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு – பொதுமக்கள் ஏமாற்றம் | Pongal special trains Ticket booking for completed in a few minutes

1345909.jpg
Spread the love

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல அறிவிக்கப்பட்ட 4 சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய நிலையில், முக்கிய நாள்களில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. இதனால், பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை ஜன.14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜன.15-ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜன.16-ம் தேதி காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு தினசரி இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களிலும் முக்கிய நாள்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.

இதையடுத்து, பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் எப்போது அறிவிக்கப்படும் என பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர். இதற்கிடையில், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களுக்கு 3 சிறப்பு ரயில்களும், சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு சிறப்பு ரயிலும் கடந்த 3-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜன.12-ம் தேதி புறப்படும் சிறப்பு ரயில், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரத்துக்கு ஜன.13-ம் தேதி இயக்கப்படும் தலா ஒரு சிறப்பு ரயிலிலும் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது.

குறிப்பாக, சென்னை சென்ட்ரல் – நாகர்கோவிலுக்கு ஜன.12-ம் தேதி புறப்படும் சிறப்பு ரயிலில் சில நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது. இந்த ரயிலில் மதியம் ஒரு மணி நிலவரப்படி, காத்திருப்போர் பட்டியல் பதிவும் முடிந்து, “ரெக்ரெட்” என்று காட்டியது. மற்ற வகுப்புகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

மறுமார்க்கமாக, திருநெல்வேலி – தாம்பரத்துக்கு ஜன.19-ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயிலில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது. மற்ற நாட்களில் சிறப்பு ரயில்களில் போதிய டிக்கெட்கள் இருந்தன.

சென்னை எழும்பூர், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் சிறப்பு ரயில்களில் டிக்கெட் எடுக்க பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்தனர். ஆனால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்ததால், டிக்கெட் கிடைக்காமல் பெரும்பாலான மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, கூடுதல் சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *