“சில நேரங்களில் மனசாட்சிக்கு எதிராக பேச வேண்டியுள்ளது” – அண்ணாமலை | Annamalai press meet in coimbatore

Spread the love

சென்னை: “சில நேரங்களில் தலைவர்களின் பேச்சைக் கேட்டு, சபை நாகரித்திற்காக எனது மனசாட்சிக்கு எதிராகக் கூட பேச வேண்டிய சூழல் வருகிறது. மனசு ஒன்று சொல்கிறது. வாய் ஒன்று சொல்கிறது. நேரம் வரும்போது பேசுகிறேன்” என கோவையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த விடமாட்டோம் என தமிழக அமைச்சர்கள் யாரேனும் சொன்னால் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு தான் செல்ல வேண்டும். திமுக தலைவர்கள் பிஹார் மக்களை அவமானப்படுத்தி பேசியதைத்தான், பிரதமர் மோடி பிஹாரில் எடுத்து பேசினார்.

பிரதமர் சொல்லாத ஒரு விஷயத்தை முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அவர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்; பிரதமர் மோடி தமிழக மக்களைப் பற்றி தவறாக கூறிவிட்டதாக முதல்வர் கூறுகிறார். முன்னதாக தயாநிதி மாறன், டிஆர்பி ராஜா, பொன்முடி, ஆ.ராசா போன்றவர்கள் பிஹார் மக்களை அவமானப்படுத்தினார்கள்.

சத்தியப் பிரமாணத்துக்கு எதிரக முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை உள்ளது. சத்தியப் பிரமாணத்தை பொறுத்தவரை, அரசியலமைப்பை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். மக்கள் நலனை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். ஆனால், பிரதமர் சொல்லாத விஷயத்தை சொன்னதாக முதல்வர் கூறுகிறார். அவர் தன்னைத் தானே திருத்திக் கொள்ள வேண்டும்.

அமித் ஷாவும், மோடியும் தூய அரசியலை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் வேலையை விட்டுவிட்டு வந்து பாஜகவில் பயணம் செய்கிறேன். தமிழகத்தில் நல்ல அரசியலை கொடுக்கக் கூடிய கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறேன். பிடித்திருந்தால் இருக்கப் போறேன். இல்லையென்றால் கிளம்பப் போகிறேன். எனக்கு பிடித்த விவசாயத்தை பார்த்துவிட்டு இருக்கப் போகிறேன்.

பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமில்லை. நான் தற்போது அதிமுகவைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் அதிமுகவில் இன்னும் சிலர் என்னை திட்டிக்கொண்டு தான் உள்ளனர். ஆனால் நான் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கொடுத்த வார்த்தைக்காக அமைதியாக் இருக்கிறேன். எனக்கு திரும்ப பேச இரண்டு நிமிடங்கள் ஆகுமா? அனைத்துக்கும் எல்லை இருக்கிறது. எல்லோருக்கும் ஒரு லட்சுமண ரேகை இருக்கிறது. அதை கடக்க கூடாது. நேரம் வரும்போது பேசுகிறேன்.

பதவி எல்லாம் வெங்காயம் மாதிரி. உரித்தால் ஒன்றுமே இருக்காது. நேர்மையான அரசியலுக்காக காத்திருக்கிறேன். சில நேரங்களில் தலைவர்களின் பேச்சைக் கேட்டு, சபை நாகரித்திற்காக எனது மனசாட்சிக்கு எதிராகக் கூட பேச வேண்டிய சூழல் வருகிறது. மனசு ஒன்று சொல்கிறது. வாய் ஒன்று சொல்கிறது. இருப்பினும் ஒரு சில விஷயங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. பேச ஆரம்பித்தால் நான் பல விஷயங்களை பேசிவிடுவேன். ஆனால், நான் பேசக் கூடாது.

தனிக்கட்சி எல்லாம் தொடங்கி என்னால் நடத்த முடியுமா? என் உயரம் எனக்கு தெரியும். நான் பிரதமர் மோடியின் மீது வைத்துள்ள நம்பிக்கை இம்மியளவும் குறையாது, குறையவில்லை” என்று அண்ணாமலை கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *