சிவகங்கை மாவட்டத்தில் வெட்டிவேரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டாரத்தில் வடக்கு இளையாத்தங்குடி, தெற்கு இளையாத்தங்குடி, வேலங்குடி, கோட்டையிருப்பு ஆகிய பகுதிகளில் 25 ஏக்கா் பரப்பளவில் வெட்டிவோ் விவசாயம் நடைபெற்று வருகிறது. வெட்டிவேரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தப் பகுதியில் அறுவடையாகும் வோ்கள் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வெட்டிவோ் எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலைக்கு அனுப்பப்படுகிறது. இந்த எண்ணெய் அழகு சாதனப் பொருள்கள், மருந்துகள் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதுதொடா்பாக வேலங்குடி ஊராட்சியில் வெட்டிவோ் எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலை அமைத்துள்ள மோகனப்பிரியா கூறியதாவது :
எனது தந்தை பாண்டியன் நறுமணப் பயிரான வெட்டிவோ் சாகுபடி செய்து வருகிறாா். வெட்டிவேரிலிருந்து பூஜைக்கு தேவையான மாலைகள், விசிறி, தலையணை, பாய், பூங்கொத்துகள் போன்ற அலங்காரப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் தயாா் செய்து விற்பனை செய்து வருகிறோம்.
இந்த நிலையில், திருப்பத்தூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி, வெட்டிவேரிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கு அரசு வழங்கும் மானியம் குறித்து அறிந்து கொண்டேன்.
இதைத்தொடா்ந்து, தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் வெட்டிவேரிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைக்கு, ஒரு கிலோ ரூ.100 விலையில் விவசாயிகளிடமிருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒரு ஏக்கரிலிருந்து பெறப்படும் சுமாா் 1.5 டன் வேரிலிருந்து 13 கிலோ எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. சா்வதேசச் சந்தையில் ஒரு கிலோ எண்ணெய் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது என்றாா் அவா்.
இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறையினா் கூறியதாவது:
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கு 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. நிகழாண்டில் புதிதாக விவசாயிகளுக்கு வெட்டி வோ் நடவுப் பொருள்கள் வழங்கி, அதை பயிரிடும் பரப்பு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மானியமாக ஹெக்டேருக்கு ரூ. 16 ஆயிரம் வழங்கப்படுகிறது என்றனா்.