சிவகாசி: தண்ணீரை முகத்தில் ஊற்றி முகமூடிக் கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி – வைரல் வீடியோ

Spread the love

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்துள்ளார் . முன்னதாக நள்ளிரவிலேயே சைக்கிளில் வந்து வீட்டின் முன் வராண்டா பகுதியில், தனது முகம் தெரியாத அளவுக்குத் துணியால் முகம் முழுவதும் முகமூடி அணிந்தபடி பதுங்கியிருந்த மர்ம நபர் ஒருவர், மூதாட்டியின் கண்களைத் தனது கையால் பொத்தி, அவர் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் கம்மலைப் பறிக்க முயன்றுள்ளார். உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட மூதாட்டி மகேஸ்வரி உரத்துக் கூச்சலிட்டதுடன் மட்டுமல்லாமல், கொள்ளையனின் முகத்தில் வீட்டில் சொம்பில் இருந்த தண்ணீரை ஊற்றித் தாக்கி விரட்டியடித்துள்ளார். தனது முகத்தில் ஆசிட் போன்ற திரவம்தான் ஊற்றப்பட்டதோ என்று பயந்து பதறிப்போன முகமூடி கொள்ளையன், தலை தெறிக்க அங்கிருந்து சைக்கிளை விட்டுவிட்டு ஓடி மறைந்தான்.

திருடனை விரட்டும் மூதாட்டி

திருடனை விரட்டும் மூதாட்டி

இந்தச் சம்பவத்தின் முழு விவரங்களும் மூதாட்டியின் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாக வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ காட்சிகளில், நள்ளிரவில் சைக்கிளில் வந்த முகமூடி கொள்ளையன் வீட்டின் வராண்டாவில் பதுங்கியிருப்பது, அதிகாலையில் மூதாட்டி வாசல் பகுதியைச் சுத்தம் செய்யும்போது திடீரென பின்னால் இருந்து தாக்குவது, மூதாட்டி கூச்சலிட்டு எதிர்த்து தண்ணீரை ஊற்றுவது, பயந்து ஓடும் கொள்ளையன் ஆகிய காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு, தப்பியோடிய முகமூடி கொள்ளையனை வலைவீசித் தேடி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *