சிவகாசி பட்டாசு விபத்தில் 10 பேர் பலி

1244621
Spread the love

சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி அருகே பட்டாசு ஆலையை திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்த சரவணன் என்பவர் நடத்தி வந்தார். சுமார் 80 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரித்து வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

வெடி விபத்து

வழக்கம் போல் இன்று(9 ந்தேதி) காலை தொழிலாளர்கள் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு வந்தனர். மதியம் 2 மணியளவில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 7 அறைகள் தரைமட்டமானது.

கட்டிடம் இருந்த இடமே தெரியாத அளவுக்கு அனைத்தும் பறந்தன.
இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 6 பேரும் பரிதாபமாக இறந்தனர். மேலும் 5 பேர் உடல் கருகி உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.

10 பேர் பலியான சோகம்

தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் ஆம்புலன்சி விரைந்து வரவழைக்கப்பட்டது. அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

கட்டிடங்கள் தரைமட்டம்

வெடிவிபத்து நடந்த இடத்தில் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகி கிடந்தன. ஒரு தொழிலாளியின் உடல் வெடிவிபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் மீட்கப்பட்டது.
சம்பவ இடத்தில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஜனா, பட்டாசு தனி வட்டாட்சியர் திருப்பதி, ஏடிஎஸ்பி சூர்யமூர்த்தி, டிஎஸ்பிக்கள் சுப்பையா, பவித்ரா, முகேஷ் ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இறந்தவர்கள் பெயர் விபரம்

1)மத்தியசேனை சந்திரசேகர் மகன் ரமேஷ்(31), 2) சந்திவீரன் மனைவி வீரலட்சுமி(48), 3)வி.சொக்கலிங்கபுரம் குருசாமி மகன் காளீஸ்வரன்(47), 4)சிவகாசி ரிசர்வ்லைன் மச்சக்காளை மனைவி முத்து(52), 5) மாயாண்டி மனைவி ஆவுடையம்மாள்(75), 6)சக்திவேல் மனைவி வசந்தி(38), 7) இந்திரா நகர் கணேசன் மனைவி பேச்சியம்மாள் என்கிற ஜெயலட்சுமி(22),8)லட்சுமி(43), 9)விஜயகுமார்(30), 10) மத்திய சேனையை சேர்ந்த கீதாரி மகன் அழகர்சாமி ஆகிய 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிவகாசி அருகே ரிசர்வ்லைன் அய்யம்பட்டியை சேர்ந்த ஆவுடையம்மாள், அவரது மகள் முத்து, மருமகள் பேச்சியம்மாள் ஆகியோர் பலியாகி இருக்கிறார்கள். இதனால் அந்த கிராமமக்கள் மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

காயம் அடைந்தவர்கள்

சிவகாசி ரிசர்வ் லைன் மாரீஸ்வரன் மனைவி மல்லிகா(35), மூக்கன் மகன் திருப்பதி(47), மகாலிங்கம் மகன் கண்ணன்(30), ஆலமரத்துப்பட்டி லட்சுமணன் மகன் சுப்புலட்சுமி(62), அய்யம்பட்டி ராமமூர்த்தி மனைவி நாகஜோதி(35), சித்திவிநாயகர் மனைவி மாரியம்மாள்(50),மத்தியசேனை செல்வம் மனைவி இந்திரா(48), ரெங்கசாமி மகன் ஜெயராஜ்(42), முருகன் மனைவி ரெக்கம்மாள்(40), பெருமாள் மகன் அழகுராஜா(30), அழகுராஜா மகன் அம்சவல்லி(32), சுரேஷ் மனைவி செல்வி(39), நாச்சான் மனைவி வீரலட்சுமி(35), ராஜாமணி மகன் மோகன்ராஜ்(35) ஆகியோர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மு.க. ஸ்டாலின் இரங்கல்

விபத்தில் பலியானர்வர்களுக்கு இரங்கல் தெரிவித்து முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:—&சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (மே 9) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *