கனடாவில் இருந்து செயல்படும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பினரைக் குறிவைக்கும் சதித்திட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்கு இருந்தது என்ற தகவலை கனடா அதிகாரிகள் கசியவிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்துறை மூலம் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டிருந்ததாகக் கிடைத்த தகவலை, அமெரிக்க ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டதை கனடா நாட்டு மூத்த அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளதை தி அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஏற்கனவே, இந்தியா – கனடா நாடுகளுக்கு இடையே இருக்கும் மோதல் போக்கு, இந்த செய்திகள் மூலமாக மேலும் பிளவை அதிகரிக்கவே செய்யும் என்றும் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தொடர்பு பற்றி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிடம் உறுதி செய்த தகவலை, தேசிய பாதுகாப்புக் குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கனடா நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் கூறியிருக்கிறார்.
அதாவது, “வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் என்னை அழைத்து அவர், அந்த நபர்தானா என்று கேட்டார். ஆமாம், அவர்தான் என்பதை நான் உறுதி செய்தேன்” என்று மொரிசன் தேசிய பாதுகாப்புக் குழுவிடம் கூறினார்.
ஆனால், அமித் ஷாவின் தொடர்பு பற்றி கனடா நாட்டுக்கு எப்படி தெரிய வந்தது என்னபதை மோரிசன் கூறவில்லை.