சீட் கேட்டு அழுத்தம் தரும் ஆதரவாளர்கள்: தடைகளைத் தாண்டி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா உதயநிதி ஸ்டாலின்? | will udhayanidhi give seats to his supporters

1374620
Spread the love

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கேட்டு ஆதரவாளர்கள் தொடர்ந்து அழுத்தம் தரும் நிலையில், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் குறைந்தபட்சம் 40 இடங்களையாவது பெறும் முனைப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படு கிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திமுக, இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கான முனைப்புடன் செயலாற்றி வருகிறது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதியின் நிர்வாகிகளையும் நேரடியாக சந்தித்து கள நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் பெறுவதற்காக நிர்வாகிகள் பலர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், திமுக தலைமையிடம் இருந்து யாருக்கும் உத்தரவாதம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மறுபுறம், இளைஞரணி நிர்வாகிகள் பலரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கேட்டு வருகின்றனர். கடந்த காலங்களைப் போல் இல்லாமல், இந்த முறை தனது ஆதரவாளர்களுக்கு அதிக சீட் பெற்றுத் தருவதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முனைப்புடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் வட்டாரங்களில் கூறப்படுவ தாவது: கட்சியில், அரசு நிர்வாகத்தில் உரிய மரியாதை வழங்கப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் தனக்கான அதிகாரத் தேவைகளை உதயநிதி போராடித்தான் பெற்றுவருகிறார். 2021-ல் முதல்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதி போட்டியிட்ட போதே தன்னுடன் சேர்த்து ஆதரவாளர்கள் சிலரை பேரவைக்குள் கொண்டுவர வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அப்போது திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்த ஐபேக் மூலமாக அதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.

அதைத்தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு 5 இடங்களை பெற்றுத்தர உதயநிதி முயன்றார். ஆனால், ஈரோடு வேட்பாளர் பிரகாஸுக்கு மட்டுமே சீட்டு கிடைத்தது. அந்த ஒரு சீட்டை பெற்றதற்கு அமைச்சர் முத்துசாமி கோபித்துக் கொண்டு சில நாட்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் இருந்தார். பிறகு தலைமையின் சமரசத்தால்பணிகளை மேற்கொண்டார்.

அதன்பின் மாவட்டச் செயலாளர் விரிவாக்கத்திலும் அவர் ஆதரவாளர்களுக்கு எதிர்பார்த்தது வழங்கப்படவில்லை. உதயநிதியின் தீவிர ஆதரவாளர்களாக, மாவட்டச் செயலாளர்களில் சிற்றரசு (சென்னை), ராஜேஷ் குமார் (நாமக்கல்) என ஒருசிலர் மட்டுமே உள்ளனர். கட்சிப் பொறுப்புகள், தேர்தல் பணிகளில் ஆதரவாளர்களை கொண்டுவர உதயநிதி முயற்சித்தாலும் தலைமை அதற்கு உடன்படவில்லை. அதேநேரம் இளைஞரணி நிர்வாகிகளும், அவரது

ஆதரவாளர்களும் கட்சியில் உதயநிதிக்கு பக்கபலமாக இருக்கின்றனர். அவருக்கான மக்கள் செல்வாக்கை அதிகரிப்பதற்காக பல்வேறு செயல்பாடுகளை தனிப்பட்ட முறையிலும் மேற்கொண்டுவருகின்றனர். அதற்கு பிரதிபலனாக தேர்தலில் சீட் வழங்கும்படி பலரும் உதயநிதியிடம் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்துள்ளனர்.

குறைந்தபட்சம் 40 சீட்: குறிப்பாக, திமுக இளைஞரணி துணைச் செயலாளர்கள் தூத்துக்குடி ஜோயல், க.பிரபு, ராமநாதபுரம் இன்பா ரகு, நெல்லை மாநகரஇளைஞரணி துணை அமைப்பாளர் அலீப் மீரன், மதுரையைச் சேர்ந்த நிர்வாகிகள் ராஜா, சவுந்தர் மற்றும் சேலம் பாபு என இளைஞரணியில் வருவாய் மாவட்டத்துக்கு ஒருவர் சீட் எதிர்பார்க்கின்றனர். அதேபோல், திமுக மாணவரணி மாநிலச் செயலாளர் ராஜீவ் காந்தி (கோவை தெற்கு), தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சி.எச்.சேகர் (கும்மிடிப்பூண்டி), முன்னாள் எம்.பி புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா என பிற அணிகளில் உள்ள அவரின் ஆதரவாளர்களும் சீட்டுக்கு அச்சாரமிட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் தலைமை பொறுப்புக்கு தான் வரவுள்ளதால் கட்சியில் தனக்கான செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ள உதயநிதி விரும்புகிறார். அதற்கேற்ப வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் குறைந்தது 40 பேருக்காவது சீட் பெற்றும் தரும் முனைப்பில் இருக்கிறார். ஆனால், அதற்கு தலைமையிடம் இருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. இருப்பினும், இந்த தேர்தலில் தனக்கான முக்கியத்துவத்தை நிலைநிறுத்திக் கொள்வதில் உதயநிதி தீர்க்கமாக இருப்பதால், தங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று அவரது ஆதரவாளர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர். இவ்வாறு திமுக வட்டாரங் களில் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *