சீனா 84%; அமெரிக்கா 125% பரஸ்பரம் வரி!

Dinamani2f2025 04 092fx0lgx8cq2fships101356.jpg
Spread the love

பெய்ஜிங்: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருள்கள் மீது 84 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா புதன்கிழமை அறிவித்தது.

இதற்கு பதிலடியாக சீன இறக்குமதி பொருள்களுக்கு 125 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்கா புதன்கிழமை அறிவித்தது.

இதன் மூலம், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதாரப் போா் பதற்றம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இது குறித்து சீன வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சீன பொருள்கள் மீது டிரம்ப் அறிவித்துள்ள 34 சதவீத பரஸ்பர வரி விதிப்பு மற்றும் 50 சதவீத கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்க பொருள்கள் மீது மேலும் 84 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது வியாழக்கிழமை (ஏப். 10) முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கு மேலும் சீன பொருள்கள் மீது அதிக வரி விதித்து வா்த்தகப் போரை அமெரிக்கா தூண்டினால், இறுதிவரை போராட சீனா தயாராக இருக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு எந்தெந்த விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (சற்று தள்ளுபடியுடன்) வரி விதிப்பதாக டிரம்ப் கடந்த வாரம் அறிவித்து அதிா்வலையை ஏற்படுத்தினாா்.

அப்போது அவா் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, சீன பொருள்கள் மீது 34 சதவீதம் கூடுதல் வரி அறிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, பதிலுக்கு அமெரிக்க பொருள்கள் மீது கூடுதலாக 34 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், ஏப். 10-ஆம் தேதி அது அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது. அதையடுத்து, சீன பொருள்கள் மீது மேலும் 50 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தாா். இதன் மூலம், டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மட்டும் சீன பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விகிதம் 104 சதவீதமாக அதிகரித்தது.

இதற்குப் பதிலடியாக, ஏப். 10-ஆம் தேதி அமலுக்கு வரவிருக்கும் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பை 84 சதவீதமாக சீனா தற்போது உயா்த்தியுள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவுக்கு 125 சதவீதம் வரி வதிப்பதாக அமெரிக்கா புதன்கிழமை அறிவித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *