திருச்சியில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி மக்கள் மாநாட்டை நடத்துகிறது, நாம் தமிழர் கட்சி. 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கட்சி மாநாடு என்பதால் மேடையில் யார் இருப்பார்கள், யாரெல்லாம் பேசுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்புகள் நா.த.க-வுக்குள் கிளம்பியிருக்கிறது. அதுகுறித்து நாமும் விசாரித்தோம்.
2010-ம் ஆண்டு மே 18-ம் தேதி நாம் தமிழர் கட்சி தொடக்கமாக மாநாட்டை ஒருங்கிணைத்தனர் சீமான் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள். அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் மே 18-ம் தேதி இனஎழுச்சிப் பொதுக்கூட்டத்தையும் நவம்பர் 27-ம் தேதி மாவீரர் நாளையும் நடத்திவருகிறது அக்கட்சி.

சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களின்போது வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை விமர்சையாக நடத்துவது வழக்கம். இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறது. இந்த மாநாட்டில் என்ன நடக்கும், யாரெல்லாம் பேசப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியிலேயே எகிறியிருக்கிறது.
‘மேடையில் 234 வேட்பாளர்கள்!’
இது தொடர்பாக நம்மிடம் பேசிய நா.த.க கட்சி நிர்வாகிகள், “2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக இதுவரை இல்லாத வகையில் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமனமும், சோஷியல் இன்ஜினீயரிங் வியூகத்தில் வேட்பாளர் தேர்வையும் மேற்கொண்டிருக்கிறார் சீமான். ஆனால், நா.த.க கூடாரம் காலியாகிவிட்டது, சீமானுக்கு வாக்களித்தவர்கள் விஜய் பக்கம் சென்றுவிடுவார்கள் என்றெல்லாம் கருத்துருவாக்கம் செய்யப்பட்டுவரும் நிலையில், அதை தகர்க்கவே மாபெரும் மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறோம்” என்றவர்களிடம், ‘மாநாட்டு மேடையில் யாரெல்லாம் இருப்பார்கள்?’ என்ற கேள்வியை முன்வைத்தோம்.

அதற்கு, “பொதுவாக நாம் தமிழர் கட்சி மேடையில் யாரையும் அமர வைப்பது கிடையாது, உரையாற்றுபவர்கள் மட்டும் மேடைக்குச் சென்று பேசிவிட்டு இறங்கிவிடுவார்கள். அதேவேளையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டமும் இணைந்து நடப்பதால் 234 வேட்பாளர்களை மேடையேற்ற திட்டமிட்டிருக்கிறோம். தொகுதி வாரியாக அறிவித்துவிட்டு இறுதியாக, தான் போட்டியிடும் தொகுதியையும் அறிவிக்கிறார் சீமான்” என்றனர்.
‘சீமான் மட்டுமே உரையாற்றுவார்!’
பொதுவாக அரசியல் கட்சி மாநாடுகளில் பொதுச்செயலாளர், சார்பு அணி மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் உரையாற்றிய பிறகு கட்சி தலைமை உரையாற்றுவது வழக்கம். நா.த.க மாநாட்டு மேடையில் யார் யாரெல்லாம் உரையாற்றுவார்கள் என விசாரித்தோம்.

நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், “மற்ற கட்சிகள் பின்பற்றும் மேடை மரபுகளை நா.த.க பின்பற்றுவதில்லை, மாவீரர் நாளிலும் இனஎழுச்சிப் பொதுக்கூட்டங்களிலும் சீமான் மட்டுமே பேசுவார். ஆகையால் இந்த மாநாட்டிலும் மற்ற முன்னணி நிர்வாகிகள் மைக் பிடிக்க வாய்ப்புகள் இல்லை. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து ஆட்சி வரைவு குறித்து நேரடியாக சீமானே பேசுவார். குறிப்பாக விஜய் மீதான விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டு ‘திராவிடம் Vs தமிழ்தேசியம்’ என்பதே தமிழக அரசியல் களம் என்பதை நிறுவுவார். தி.மு.க-வுக்கு நிகராக பா.ஜ.க-வின் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைப்பார் சீமான்” என்றனர்.