சீரியல்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியம் உருவாக்க கோரி வழக்கு! | Petition seeking creation of a small screen censorship board to regulate serials!

1352954.jpg
Spread the love

மதுரை: சீரியல், விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியம் உருவாக்கக் கோரிய வழக்கில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ‘தற்போது ஒளிபரப்பப்படும் சீரியல்கள் எவ்விதமான தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. முறை தவறிய உறவுகள், பிறருக்கு கெடுதல் செய்வது, தனக்கு வேண்டியதை அடைய எதை வேண்டுமானாலும் செய்வது போன்ற தவறான ஒழுக்கங்கள் சீரியல்களில் கற்பிக்கப்படுகின்றன. அதோடு சில நேரங்களில் வரம்பு மீறிய ஆபாச காட்சிகளும், நடிப்பவர்கள் ஆபாசமாக உடை அணிந்து வரும் காட்சிகளும், இரட்டை அர்த்தம் பொதிந்த வசனங்களும் ஒளிபரப்பப்படுகின்றன.

இதுபோன்ற சீரியல்களை பார்க்கும் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுகின்றனர். குடும்பங்களில் உறவுச்சிக்கல் ஏற்படுவதற்கும் சீரியல்கள் காரணமாக அமைகின்றன. இவற்றை முறைப்படுத்த நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

டிவி சீரியல்கள் மற்றும் விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை உருவாக்க வேண்டும். வாரியத்தின் சான்றிதழை பெற்ற பிறகே ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு அதிக அளவிலான அபராதத்தை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, ‘வழக்கு தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *