மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு சீரமைப்பு பணிகளுக்காக தமிழக அரசு கடந்த ஆண்டு ரூ.8கோடியே 40லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியின் கீழ் கழிவறைகள், உணவகங்கள், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கான புதிய கட்டடம் கட்டி முடித்து 7 மாதங்கள் ஆன நிலையிலும் இன்றும் திறக்கப்படாமல் பார்ப்போர் பலரும் என்ன இது? என்று கேட்கும் அளவில் காட்சிப் பொருளாகவே இருக்கிறது.
இது குறித்து அப்பகுதி மக்களிடையே பேசியபோது, “பழைய ஸ்டாண்டுக்கு பதிலா புதுசா கட்டுனாங்க. கட்டி முடிச்சும் ஆறு ஏழு மாசம் ஆகிடுச்சு. ஆனா, திறந்த பாடுதான் இல்ல. எப்ப தெறப்பாங்கன்னு தெரியல. நாங்களும் இன்னைக்கி தெறந்துடுவாங்க. நாளைக்கி தெறந்துடுவாங்கன்னு தான் நெனச்சிட்டு இருந்தோம்.
ஆனா, மாசம் இத்தன ஆகியும் இன்னும் டெண்டரும் விடல. தெறக்கவும் இல்ல. முன்னடிலாம் வரப்ப பஸ் ஸ்டாண்ட்ல வண்டிய போட ஸ்டாண்ட் இருக்கும். வந்தோம்மா வண்டிய ஸ்டாண்ட்ல போட்டோமான்னு போயிக்கிட்டே இருப்போம். ஒடனே பஸ்ஸும் ஏறிடுவோம்.
ஆனா, இப்பலா வண்டிய கெடக்கிற இடத்துலே நிப்பாட்டிட்டு போறோம். வண்டி காணப்போயிடுமோன்னு பயமாவும் பதட்டாமாவுமே இருக்கும்.