கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவில் பக்தர்கள் தரப்பில் சில கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது தேர்வடம் இழுக்கச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆவேசமாகி சில வார்த்தைகளைப் பேசியது சர்ச்சையானது.
பா.ஜ.க அமைப்பினர்தான் அப்படி கோஷம் போட்டதாக தி.மு.க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு தாமதமாக வந்ததுதான் பிரச்னைக்குக் காரணம் என அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தெரிவிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அனைத்துக் கோயில்களிலும் நடைபெறுகின்ற திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், தேரோட்ட நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்தும் மக்களின் பங்களிப்பு மூலம்தான் நடைபெற்று வருகின்றன. இது அமைச்சருக்குத் தெரியுமா, அல்லது மறந்து விட்டாரா?

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் பத்து நாட்கள் மார்கழி திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது.
சுவாமிக்குக் குறித்த நேரத்தில் பூஜைகள் நடத்தப்பட்டு தேர்த்திருவிழா தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அமைச்சர் காலதாமதமாக வந்ததன் காரணமாகத் தேரோட்ட நிகழ்வு தொடங்குவது காலதாமதமானது.