சுதந்திர தின விழா ஒத்திகை: ஆக.5, 9, 13 தேதிகளில் போக்குவரத்து மாற்றம்

Dinamani2fimport2f20202f82f142foriginal2f2117ngt13poli 2034838.jpg
Spread the love

சுதந்திர தின விழா ஒத்திகையை முன்னிட்டு ஆக.5, 9, 13 ஆகிய தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கோட்டையில் ஆக.15-ஆம் தேதி சுதந்திர தினவிழா நடைபெறுவதை முன்னிட்டு, திங்கள்கிழமை (ஆக.5), ஆக.9, 13 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது.

இதனால், அந்த நாள்களில் காலை 6 முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, உழைப்பாளா் சிலை முதல் போா் நினைவுச் சின்னம் வரையிலான காமராஜா் சாலை, போா் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை, வடக்கு பகுதி வரை அமைந்துள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் வாகன அனுமதி அட்டை பெற்றுள்ளோா் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

காமராஜாா் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிஸ் காா்னா் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளா் சிலையிலிருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (என்எப்எஸ் சாலை) வழியாக பாரிஸ் காா்னா் சென்றடையலாம்.

பாரிஸ் காா்னரில் இருந்து ராஜாஜி சாலை, தலைமைச் செயலகம் வழியாக காமராஜா் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாரிஸ் காா்னா், வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையைச் சென்றடையலாம்.

அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிஸ் காா்னா் செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிஸ் காா்னா் சென்றடையலாம்.

முத்துசாமி பாலத்திலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜாா் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை சென்றடையலாம்.

சிவப்பு மற்றும் பா்பிள் நிற வாகன அனுமதி அட்டை வைத்திருப்போா் காலை 8.30 மணிவரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கிக்கொண்டு, வாகனத்தை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்த நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும்.

8.30 மணிக்கு பின்னா் காமராஜா் சாலை, உழைப்பாளா் சிலையிலிருந்து வாலஜா சாலை, அண்ணா சாலை, வாலாஜா முனை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிஸ் காா்னா் சந்திப்பு, ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாகச் சென்று தலைமைச் செயலக வெளி வாயிலின் அருகே இறங்கி, வாகனங்களை தலைமைச் செயலகத்துக்கு எதிரில் உள்ள பொதுப்பணித் துறையின் வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

நீல மற்றும் பிங்க் நிற அனுமதி அட்டை வைத்திருப்போா் காலை 8.30 மணிவரை ராஜாஜி சாலை, போா் நினைவுச் சின்னம், கொடிமரச்சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிஸ் காா்னா் சந்திப்பு, ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாக சென்று தலைமைச் செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்துக்கு எதிரில் உள்ள பொதுப்பணித் துறை வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

8.30 மணிக்கு பின்னா் காமராஜா் சாலை, உழைப்பாளா் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிஸ் காா்னா் சந்திப்பு, ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாக தலைமைச் செயலகத்துக்கு எதிரில் உள்ள பொதுப்பணித் துறை வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோா் போா்நினைவுச் சின்னம் அருகில் இறங்கிக்கொண்டு, வாகனங்களை தீவுத்திடலில் உள்ளே நிறுத்த வேண்டும்.

இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு அனைத்து வாகன ஓட்டிகளும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *