கற்கள் பெருமளவில் தேவைப்பட்டதால், முதலில் பவர் ட்ரில், ஹெவி கிரஷர்கள் போன்ற இயந்திரங்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதிக செலவு, தாமதம், சாலைகள் குறைவு போன்ற சிக்கல்கள் ஏற்பட்டன. அதற்குப் பதிலாக, மனித உழைப்பை நம்பி பல குவாரிகள் திறக்கப்பட்டன. ஒட்டர் சமூகத்தினர் (ஆண்களும், பெண்களும்) கற்கள் உடைக்கும் வேலையில் ஈடுபட்டனர்.
இவர்களின் உழைப்பால் குறைந்த செலவில் கோடிக்கணக்கான கனஅடி கற்கள் கிடைத்தது. பெண்கள் ஆண்களுக்கு நிகராக சுத்தியல், ட்ரில் பிடித்தல் போன்ற பணிகளில் பங்கு கொண்டனர் என்பது வெகு சிறப்பு!
ஒட்டர்கள் மிகுந்த திறமையுடன் வேலை செய்தாலும், மதுவில் மூழ்கி சில நாட்கள் வேலையைத் தவிர்ப்பது, அதிகாரிகளை ஏமாற்றி கற்கள் அடுக்குகளில் வெற்றிடம் வைப்பது போன்ற சில குறைகளும் இருந்தன என்று பதிவு செய்துள்ளனர், பிரிட்டிஷ் அதிகாரிகள்.
இருந்தாலும், இவர்களின் பங்களிப்பு இல்லாமல் இவ்வளவு குறைந்த செலவில் இத்தகைய மாபெரும் அணை கட்ட இயலாது என்று பிரிட்டிஷ் பொறியாளர்கள் தங்கள் பதிவுகளில் பாராட்டியும் உள்ளனர். இந்த சமுதாய மக்கள் இந்த அணை கட்டுமானத்துக்கு மிகப்பெரிய அளவில் தங்கள் பங்களிப்பை நல்கியுள்ளனர் என்பதுவே நிஜம்!
கடும் உழைப்பாளிகளான இவர்கள் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள்!
மொத்தத்தில், சிமெண்ட் கான்கிரீட் உபயோகம், அருகிலேயே கிடைத்த மணல், ஒட்டர் தொழிலாளர்களின் உழைப்பு போன்ற காரணங்களால், மேட்டூர் அணை மிகக் குறைந்த செலவில், வேகமாகவும், வலிமையாகவும் கட்டப்பட்டு முடிந்தது. இதுவே இந்திய பொறியியல் வரலாற்றில் ஒரு பெரிய பாடம் என்று குறிப்பிடுகிறார்கள், பிரிட்டிஷ் பொறியாளர்கள்!