முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ஆர் கே நகர் தொகுதியில் முகாமிட்டனர். சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அதிமுகவில் இருந்து விலகிய அல்லது நீக்கப்பட்ட மற்றொரு தரப்பினர் தீவிரப் பரப்புரை செய்தனர்.
2014 நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 2015 சட்டமன்ற இடைத்தேர்தல், 2016 சட்டமன்ற பொதுத்தேர்தல், 2017 ஏப்ரலில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு ரத்து, 2017 டிசம்பரில் சட்டமன்ற இடைத்தேர்தல் என்று அடுத்தடுத்து அரசியல் கட்சிகளின் வருகையால் ஆர்.கே.நகர் மக்களும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.
பணப்பட்டுவாடா புகாரால் ரத்தான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2017 டிசம்பர் 21 அன்று நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியான போது, டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார். தினகரனின் வெற்றிக் கணக்கு அவருக்கு அதிமுகவில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராகவும் முன்னிறுத்தப்பட்டது.
2015 இடைத்தேர்தலில் ஜெயலலிதா 1,60,432 வாக்குகள் பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் 9,710 வாக்குகள் மட்டுமே பெற்றார். வாக்கு வித்தியாசம் 1,50,722.
அடுத்து வந்த 2016 பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் 57,673 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 39,545.
2017 இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் இ. மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 40,707.
ஆளுங்கட்சியான அதிமுக தோல்வி கண்டது. பிரதான எதிர்கட்சியான திமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை. திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் மட்டுமே பெற்றார். நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம் 3,802 வாக்குகளும், பாஜக கரு. நாகராஜன் 1,368 வாக்குகளும் பெற்றனர். ஆனால் நோட்டாவிற்கு பாஜகவைவிட அதிகமாக 2,348 வாக்குகள் கிடைத்திருந்தது.
ஒரு இடைத்தேர்தல் பல அரசியல் கணக்குகளை எடுத்துக் காட்டியது என்றால் அது ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தான்.