சென்னை: புதுப்பிக்க எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. குறிப்பாக, நம்பகமான, திறமையான நகர்ப்புற போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதை நோக்கமாக கொண்டும் செயல்படுகிறது. புதுப்பிக்க எரிசக்தியை பெறும் வகையில், சூரியஒளி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாதுகாப்பான, விரைவான பயணத்தை சிறப்பாக அளித்து வருகிறது.
இதற்கிடையே, சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் டெல்லியில் கடந்த 8-ம் தேதி உச்சி மாநாடு நடைபெற்றது. இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச தங்க விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்திக்கிடம், சுற்றுச்சூழல் பிரிவு தலைமை ஆலோசகர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா தங்க விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், கூடுதல் பொது மேலாளர் ஹரி பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.