பாமக நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து பல குடும்பங்கள் வீதிக்கு வருவதைத் தடுப்பதும், தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதும் தான் அரசின் பணியாக இருக்க வேண்டும். ஆனால், அந்தக் கடமையை செய்ய தமிழக அரசு தவறி விட்டது. தமிழக அரசு நினைத்திருந்தால் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆன்லைன் சூதாட்டத்தடை வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரச் செய்து தடை பெற்றிருக்க முடியும்.
ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து திமுகவினரை காப்பாற்றுவது தொடர்பான வழக்குகளை எல்லாம் விரைவுபடுத்தும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதை வைத்துப் பார்க்கும் போது மக்கள் நலனை விட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலனைத் தான் முக்கியமாக நினைக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது. உறுதியான நடவடிக்கைகளின் மூலம் இந்த ஐயத்தைப் போக்க வேண்டியது திமுக அரசின் கடமையாகும்.
தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 25 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.