திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்திப்பெற்ற கந்த சஷ்டி விழா கடந்த சனிக்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நவ. 7ம் தேதி வியாழக்கிழமை சூரசம்ஹார விழாவை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடியும், கிரிப்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் எடுத்தும் தங்கள் விரதத்தை துவக்கினர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பக்தர்கள் தங்குவதற்காக 18 தற்காலிக பந்தல்கள் மற்றும் கூடுதல் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தங்கி பக்தர்கள் விரதமிருந்து வருகின்றனர். கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தாம்பரம் -திருநெல்வேலி அதிவிரைவு ரயில்(06099) தாம்பரத்திலிருந்து புதன்கிழமை(நவ.6) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி ரயில் நிலையத்தை வியாழக்கிழமை(நவ. 7) காலை 8.30 மணிக்கு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில், திருச்செந்தூரிலிருந்து வியாழக்கிழமை(நவ. 7) இரவு 10.15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில்(06100) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வெள்ளிக்கிழமை(நவ.8) காலை 10.30 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.