இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (ஜூலை 27) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இந்த இணை இந்தியாவுக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், ஷுப்மன் கில் 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இதனையடுத்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தனர். ரிஷப் பந்த் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அதிரடியில் மிரட்டினார் சூர்யகுமார் யாதவ். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 26 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களான ஹார்திக் பாண்டியா (9 ரன்கள்), ரியான் பராக் (7 ரன்கள்), ரிங்கு சிங் (ஒரு ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய ரிஷப் பந்த் இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டினார். அவர் 33 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் மதீஷா பதிரானா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தில்ஷன் மதுஷங்கா, அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹசரங்கா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.