ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் வீசிய போரிஸ் புயலால் கனமழை பெய்து வருகிறது. போரிஸ் புயலால் செக் குடியரசில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இதனிடையே, செக் குடியரசில் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்பதால் நிலைமை இன்னும் மோசமடையும் என்றும், ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிக்கக்கூடுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை(செப்.15) நிலவரப்படி, செக் குடியரசில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 90 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலந்து எல்லையையொட்டியுள்ள ஜெசெனிகி மலைப்பகுதிகளில் அதீத மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதன் அருகாமையில் உள்ள அப்பாவா நகரில் பத்தாயிரம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்பாவா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மலை கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்புக்குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். மலைப் பகுதிகளில் மீட்புப்பணிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
செக் குடியரசில் கடந்த 1997-ஆம் ஆண்டு, பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பின், அந்நாடு வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பை இப்போது சந்தித்துள்ளது இர்னோ, செஸ்கி ஆகிய நகரங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். செக் குடியரசின் ஆச்ட்ராவா, பொஹுமின் வழியாக போலந்து செல்லும் ஆடெர் ஆற்றில் நீர் அபாய அளவைக் கடந்து வெள்ளம் செல்கிறது.
சூறாவளிக் காற்றால் மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளதால் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக இன்று(செப்.15) செக் குடியரசின் பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
போலந்து நாட்டில், செக் குடியரசையொட்டிய எல்லைப் பகுதியான லாட்ஸ்கோ நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு சுமார் 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழக யாத்திரிகர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!
கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் ரோமானியாவில் 4 பேரும், போலந்தில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, செக் குடியரசில் 4 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரியா, ஜெர்மனி, சுலோவேகியா, ஹங்கேரி ஆகிய நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.