இத்தலத்திற்கு வேதகிரி, பட்சி தீர்த்தம், ருத்ரகோடி, கழுகாசலம், கதலிவனம், சங்குபுரம் எனப் பல பெயர்கள் உண்டு. கல்வெட்டுகளின்படி இது ‘உலகளந்த சோழபுரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
திருக்கயிலையிலிருந்து நந்திதேவரால் கொண்டு வரப்பட்ட மூன்று சிகரங்களில் ஒன்று இங்குள்ளதால், இது ‘தென் கயிலாயம்’ என்றும் போற்றப்படுகிறது.
இத்தலம் யுகங்களாக கழுகுகளால் வழிபடப்பட்ட தலம். எனவேதான் திருக்கழுக்குன்றம் என்ற பெயரையும் பெற்றது. கிருத யுகத்தில் சண்டன், பிரசண்டன்; திரேதா யுகத்தில் சம்பாதி, ஜடாயு; துவாபர யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன்; கலியுகத்தில் சம்பு, ஆதி ஆகிய கழுகுகள் வந்து ஈசனை தினமும் வழிபட்டன என்கிறது தலபுராணம்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட தினமும் உச்சிப் பொழுதில் கழுகுகள் இந்த ஆலயத்துக்கு வருவது வழக்கமாக இருந்தது. இன்றும் அபூர்வமாக கழுகுகள் வந்து செல்வதாகப் பக்தர்கள் நம்புகின்றனர்.

சுமார் 500 அடி உயர மலையில் ஈசன் வாழைப் பூங்குருத்து வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். அம்பிகை ‘சொக்கநாயகி’ மற்றும் ‘பெண்ணின் நல்லாளம்மை’ என அழைக்கப்படுகிறார். மலையடிவாரத்தில் உள்ள பெரிய கோயிலில் ஈசன் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.
இங்குள்ள அம்பிகை திரிபுரசுந்தரி. இவரின் திருமேனி அபூர்வ மானது. எனவே வருடத்தில் மூன்று நாள்கள் தவிர மற்ற நாள்களில் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.
அதேபோன்று மலையிலிருந்து இறங்கும் வழியில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கட்டிய அழகிய குடைவரைக் கோயில் ஒன்றும் உள்ளது. அதில் சிவலிங்கத் திருமேனி ஒன்றையும் தரிசனம் செய்யலாம்.