செங்கோட்டையனை நீக்கியதால் தென் தமிழகத்தில் பழனிசாமி படுதோல்வியை சந்திப்பார்: டிடிவி தினகரன் | Palaniswami will face a major defeat in South Tamil Nadu due to the removal of Sengottaiyan TTV Dhinakaran

Spread the love

மதுரை: “முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த பசும்பொன் வந்து சென்ற செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது, தென் தமிழ்நாட்டு மக்களுக்கு நேர்ந்த அவமானம். பசும்பொன்னுக்கு விருந்தாளியாக வந்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய பழனிசாமி தென் தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்திப்பார்.” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி. தினகரன், “ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் 2 மாதங்களுக்கு முன்பே அழைப்பு விடுத்திருந்தார். 1972 எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து செங்கோட்டையன் அதிமுகவில் பயணிக்கிறார், அவர் 1977 முதல் அதிமுகவில் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். எம்ஜிஆர் காலம் முதல் இப்போதுவரை சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிற மூத்த நிர்வாகி செங்கோட்டையன் மட்டும்தான்.

நேற்று முன் தினம் செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு வந்தது அரசியல் நிகழ்ச்சி கிடையாது. அவர் 10 நாட்களுக்கு முன்பு பசும்பொன்னுக்கு வருவதாக என்னிடம் சொல்லியிருந்தார், நானும் வாருங்கள் என சொல்லியிருந்தேன். ஜெயலலிதா பசும்பொன் வரும்போதெல்லாம் செங்கோட்டையன் தான் ஏற்பாடுகளை செய்வார். அதேபோல ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தின் நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பம்பரம் போல செயல்படுவார் செங்கோட்டையன். பிரச்சாரத்துக்கு வரும்போது செங்கோட்டையன் வந்து பார்வையிட்டு ஒப்புதல் தந்தால்தான் ஜெயலலிதா நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கே வருவார்.

அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற நபரை கட்சியை விட்டு நீக்கும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. செங்கோட்டையன் அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் அழைப்பு விடுத்துள்ளார். பசும்பொன் வந்தபோது செங்கோட்டையன் எதுவும் அரசியல் பேசவில்லை. நான் தான் செய்தியாளர்களிடம் பேசினேன்.

குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல அதிமுகவை கையில் வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. என்னையும், சசிகலாவையும், ஓபிஎஸ்சையும், செங்கோட்டையனையும் துரோகி என இபிஎஸ் சொல்கிறார். ஆனால் அவர்தான் துரோகி. 2021 தேர்தலில் அமித்ஷா அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என முயற்சி செய்தார், நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால், இபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர்தான் துரோகி.

இபிஎஸ்ஸை முதல்வராக்கிய 18 எம்எல்ஏக்களை நீக்கிய இபிஎஸ் துரோகியா?. இபிஎஸ்ஸை முதல்வராக்கிய சசிகலா துரோகியா?. இபிஎஸ்ஸை முதல்வராக்க பணியாற்றிய நான் துரோகியா?. துரோகத்துக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமானால், அது பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும்.

முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த பசும்பொன் வந்துசென்ற செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது, தென் தமிழ்நாட்டு மக்களுக்கு நேர்ந்த அவமானம். பசும்பொன்னுக்கு விருந்தாளியாக வந்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய பழனிசாமி தென் தமிழ்நாட்டில் பெரும் தோல்வியை சந்திப்பார்.

திமுகவின் ‘பி’ டீம் என எங்களை சொல்கிறார் பழனிசாமி. ஆனால், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு காரணமே பழனிசாமிதான். ஆட்சியை காப்பாற்றிய பாஜகவுக்கு நன்றியோடு இருப்பதாக சொல்லும் பழனிசாமி, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி மோடிக்கே துரோகம் செய்தார். அவர் 2024 தேர்தலில் திமுகவுக்காக டம்மி வேட்பாளர்களை போட்டு 3-வது, 4-வது இடத்துக்கு அதிமுகவை கொண்டு சென்றார்.

ஜெயலலிதா என்னை கட்சியிலிருந்து நீக்கியது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதன்பின்னர்தான் பழனிசாமி என்னை துணைப் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டு ஆர்கே நகரில் தொப்பி சின்னத்தில் எனக்கு வாக்கு கேட்டார். எடப்பாடி பழனிசாமியை நாங்கள் வீழ்த்தத் தேவையில்லை, அவர் செய்த துரோகமே அவரை வீழ்த்தும்.

2026 தேர்தலில் பழனிசாமியின் துரோகம் வீழ்த்தப்படும், அமமுகதான் அதற்கான ஆயுதம். கொடநாடு கொலை வழக்கு பற்றி பேசினாமே பழனிசாமி பதறுவது ஏன்?. அரக்கர்கள் கொஞ்சம் கொஞ்சமாகவே அழிவை சந்திப்பார்கள், 2026-ல் சூரசம்ஹாரம் நடக்கும், பழனிசாமி வீழ்த்தப்படுவார். செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதற்கு பழனிசாமியின் சுயநலமும், பதவி வெறியும்தான் காரணம்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *