மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு இன்று சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அவர் மதுரை கப்பலூரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: தென்காசி மாவட்டத்தில் நேற்று (அக்.29) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், நான் விரத்தியில் உச்சத்தில் உள்ளதாகவும், தினந்தோறும் பொய்யான அறிக்கையை வெளியிட்டு வருவதாகவும், அவதூறு கருத்துகளையும் கூறி வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு, முறையாக கொள்முதல் செய்யப்படாததால், தொடர் மழை காரணமாக மூட்டையில் வைக்கப்பட்டிருந்த நெல் முளைத்துவிட்டது. இதனை சட்டப்பேரவையில் கடந்த 17-ம் தேதி கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கொண்டுவந்தேன். எனவே, திறந்த வெளியில் வைத்துள்ள நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தேன்.
21-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளை சந்தித்தேன். அங்கு, கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் சுமார் 15 நாட்களாக இருப்பதாகவும், நாளொன்றுக்கு 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால் மூட்டையில் இருந்த நெல்மணிகளெல்லாம் முளைத்துவிட்டன என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இதற்கு, ஆள்கள், சாக்கு மூட்டைகள், லாரிகள் பற்றாக்குறை காரணமாக கொள்முதல் செய்யப்படவில்லை என தெரிவித்தனர். இதனை எடுத்துக் கூறினால் அவதூறு பரப்புவதாக முதல்வர் கூறுகிறார். துணை முதல்வர் தஞ்சாவூர் சென்று விவசாயிகளைச் சந்திக்காமல் ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் நெல்மூட்டைகளை மட்டுமே பார்த்துவிட்டுச் செல்கிறார்.
உணவு மானியக் கோரிக்கையின்போது, கொள்கை விளக்க குறிப்பில் 2022-23 – ஆம் ஆண்டு 29.48 லட்சம் டன், 2023-24- ம் ஆண்டு 29.46 லட்சம் டன்,2024-25-ம் ஆண்டு 28.26 லட்சம் டன், நடப்பாண்டில் இதுவரை 28.30 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டு மொத்தம் 1 கோடியே 15 லட்சத்து 49 ஆயிரம் டன் நெல் மட்டுமே திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுதோறும் 42.5 லட்சம் டன் கொள்முதல் செய்துள்ளதாக முதல்வர் பொய்யான தகவலை கூறிவருகிறார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகளை பாதுகாக்க அதிமுக ஆட்சியில் மத்திய அரசு நிதி தேசிய பருவநிலை தழுவல் நிதிமுலம் ரூ.165.68 கோடி செலவில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியில் சதுப்புநிலத்தின் அருகில் உள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது.
‘சார்’ என்றாலே திமுகவுக்கு அலர்ஜிதான். எனவே எஸ்ஐஆர்-ல் என்ன தவறு இருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழகத்தில் இறந்தவர்கள், மாறுதலாகி வேறு இடம் சென்றவர்கள் உள்ளிட்டோர் வாக்குகள் நீக்கப்பட வேண்டும். உதாரணமாக ஆர்கே நகரில் நீதிமன்றத்திற்கு சென்று 31 ஆயிரம் வாக்குகள் நீக்கியுள்ளோம்.
கரூரில் 10 ஆயிரம் வாக்குகள் நீக்கியுள்ளோம். கரூரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிக்கப்பட்ட பின்னரும், அங்கு வாக்காளர்கள் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே, இறந்தவர்கள் பட்டியல், குறிப்பிட்ட பகுதியில் வசிக்காதவர்கள் பட்டியல் எடுத்து முறையாக ஆய்வு செய்து தகுதியான வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்ற பயத்தில் எஸ்ஐஆர் மேற்கொள்ளக் கூடாது என திமுக எதிர்க்கிறது.
வரும் தேர்தலில் துரோகம் வீழ்த்தப்படும் என செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஒன்று சேர்ந்து பேசியது ஏற்கெனவே அவர்கள் போட்ட திட்டம்தான். இப்படிப்பட்டவர்களின் துரோகத்தால்தான் கடந்த முறை அதிமுக வீழ்த்தப்பட்டது. அதிமுக தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சியில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். செங்கோட்டையனை நீக்குவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
துரோகிகள் எல்லாம் தற்போது அடையாளம் காணப்பட்டுவிட்டார்கள். எனவே களைகள் அகற்றப்பட்டு அதிமுக செழித்து வளரும். டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றிணைந்து பேசியது எதற்கும் உதவாது. அவர்களைப் பற்றி பேசுவது வீணானது. என கூறினார்.