சென்னை: செண்பகவல்லி அணை சீரமைப்பு திட்டம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டுவிட்டதோ என தென்காசி, விருதுநகர் மாவட்டங்களின் பாசன பரப்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் கேரள எல்லை, பெரியாறு வடிநிலத்தில் புளியம்பட்டிதோடு, சொக்கம்பட்டிதோடு ஆகிய இரு ஓடைகள் கூடுமிடத்தில் தமிழகம் நோக்கி தண்ணீரை திருப்பி விடுவதற்காக தமிழகத்தின் மேற்கு எல்லைக்கு அருகில் செண்பகவல்லி அணை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இந்த அணையில் இருந்து தென்காசிமாவட்டம், சிவகிரி தாலுகாவில் உள்ளமுக்கிய இரு ஏரிகளான குலசேகரப்பேரி, ராசிங்கப்பேரி ஆகியவற்றுக்கு சுமார் 4,400 அடி (1341 மீட்டர்)நீளமுள்ள கன்யாமதகு கால்வாய் வழியாக ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளஏரிகளுக்கு (Chain of Tanks) தண்ணீர்திருப்பி விடப்படுகிறது. இதனால்தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 10,924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் செண்பகவல்லி தடுப்பணை (சுமார்8 மீட்டர்) சேதமடைந்தது. இதனை சீரமைப்பதற்காக கேரள அரசுடன் தமிழக அரசு தொடர்ந்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், 35 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில்போடப்பட்டுள்ள இத்திட்டம் கைவிடப்பட்டுவிட்டதோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அணை சீரமைப்பு தொடர்பாக கேரள அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என்று சட்டப்பேரவையில் வாசுதேவநல்லூர் முன்னாள் எம்எல்ஏக்கள் கிருஷ்ணன் (கம்யூனிஸ்ட்), மனோகரன் (அதிமுக),தற்போதைய எம்எல்ஏ சதன்திருமலைக்குமார் (மதிமுக) ஆகியோரின் கோரிக்கையை அரசு செவிமடுத்ததாகத் தெரியவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கம்.
இதுகுறித்து சதன் திருமலைக்குமார் கூறியதாவது: செண்பகவல்லி அணை சேதமடைந்ததால் சிவகிரியை அடுத்த உள்ளார் அருகேயுள்ள தலையணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. அணையை சீரமைக்கும்படி கோரி 1989-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.அதற்கான தொகையை கேரள அரசுக்குவழங்கினார். செண்பகவல்லி அணை உடைந்ததால் வேறு பாதையில் செல்லும் தண்ணீர் முல்லைப்பெரியாறு அணைக்குத்தான் செல்கிறது. அந்த அணையின் தண்ணீரும் தமிழகத்துக்கு தானே வருகிறது என்று சொல்லி அந்தத் தொகையை கேரள அரசு திருப்பிக் கொடுத்துவிட்டது.
இந்த அணையை சீரமைக்கும்படி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியிடம் வலியுறுத்தினார். 2006-ம் ஆண்டில் அணை சீரமைப்பை வலியுறுத்தி வாசுதேவநல்லூரில் வைகோ உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புகூட நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து மனு கொடுத்தோம். இத்திட்டம் நிறைவேற நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். இவ்வாறு தெரிவித்தார்.
அதிகாரிகள் விளக்கம்: இது தொடர்பாக நீர்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இரு மாநில பிரச்சினை என்பதாலும், தமிழக அரசின் தற்போதைய நிதி நெருக்கடி காரணமாகவும் இத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவுதான் என்று தெரிவித்தனர். அதனால் செண்பகவல்லி அணை சீரமைப்புத் திட்டம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்றே தெரிகிறது.