செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத் துறை தரப்பு சாட்சி விசாரணை தொடங்கியது! | ED witness examination begins in the case against Senthil Balaji

1296245.jpg
Spread the love

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தரப்பு சாட்சி விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்தாண்டு ஆகஸ்டில் அமலாக்கத் துறையினர் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன் நகல்கள் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டன.

இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இதனிடையே, இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, கடந்த ஆக.8-ம் தேதியன்று செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டைப் பதிவு செய்தார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய்யாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அமலாக்கத்துறையின் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

அதன்படி இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் 3 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது செந்தில் பாலாஜியும் காணொலி காட்சி மூலமாக ஆஜராகியிருந்தார். வழக்கின் முதல் சாட்சியாக சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளை முன்னாள் மேலாளரான ஹரிஷ்குமாரிடம் அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு அரசு வழக்கறிஞர் என். ரமேஷ் விசாரித்தார். அப்போது அவர், குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா, சகோதரர் அசோக்குமாரின் வங்கி கணக்கு விவரங்கள் குறித்தும், வங்கி பணப்பரிவர்த்தனைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஹரிஷ்குமார் பதிலளித்தார்.

வங்கி மேலாளர் ஹரிஷ்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதமன் ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது அவர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் சில ஆவணங்கள் அசல் இல்லை என்றும், கூடுதல் ஆவணங்களில் சில தற்போது புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் ஹரிஷ்குமாரிடம் குறுக்கு விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கு விசாரணையை வரும் ஆக.22-க்கு தள்ளிவைத்த நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் வரும் ஆக.22 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *