சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் விசாரணை தொடங்காத நிலையில், அந்த வழக்கின் அடிப்படையில் பதியப்பட்டு உள்ள அமலாக்கத் துறை வழக்கில் எப்படி விசாரணையை தொடங்க முடியும் என அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என வாதிட்டார்.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும், இங்கு நடைபெறும் குற்றச்சாட்டு பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். அப்போது நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியை ஏன் நேரில் ஆஜர்ப்படுத்தவில்லை? என புழல் சிறை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை ஆஜர்படுத்த இயலவில்லை என சிறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து குற்றச்சாட்டு பதிவை காணொலி காட்சி வாயிலாக ஏன் மேற்கொள்ளக்கூடாது என இருதரப்பிலும் நீதிபதி கருத்துகளை கேட்டார். அதற்கு அமலாக்கத் துறை தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அதையேற்க மறுத்த நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில்பாலாஜியை சிறைத் துறை அதிகாரிகள் இன்று (ஆக.8) நேரில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லையென்றால் காணொலி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.