செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு | 4 people including Senthil Balaji sworn in as Tamil Nadu Ministers

1318792.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் கோ.வி.செழியன் ஆகியோர் பதவியேற்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று (ஞாயிற்றுகிழமை) 3.30 மணியளவில் நடைபெற்றது. தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் மற்றும் கோ.வி.செழியன் ஆகியோருக்கு ஆளுநர் ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சர்கள் பதவியேற்றவுடன் ஆளுநருக்கும், முதல்வருக்கும் பூங்கொத்து கொடுத்தனர்.

அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பங்கேற்றார். அதேபோல், கூட்டணி கட்சித் தலைவர்கள் வைகோ, செல்வப்பெருந்தகை, திருமாவளவன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தமிழக அமைச்சரவையில் நேற்று (செப்.28) மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது.

துறைகள் ஒதுக்கீடு: புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும், கோ.வி செழியனுக்கு உயர்கல்வித் துறையும், ஆவடி நாசருக்கு சிறுபான்மை நலத்துறையும், இரா. ராஜேந்திரனுக்கு சுற்றுலா துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலாக்காக்கள் மாற்றம்: முன்னதாக நேற்று, உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுற்றுச்சூழல் அமைச்சர் வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு, ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பால் வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காலநிலை மாற்றம் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 6 பேரின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி மலர்தூவி மரியாதை: முன்னதாக, துணை முதல்வர் உதயநிதி, பெரியார் திடலுக்குச் சென்று தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதோடு, அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செய்தார்.

பிறகு, பெரியார் திடலில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியை சந்தித்தார். தொடர்ந்து பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்குச் சென்று அங்கே அவருடைய உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதி வாழ்ந்த இல்லத்துக்குச் சென்றார். தொடர்ந்து சிஐடி காலனி இல்லத்துக்குச் சென்று தனது அத்தை கனிமொழியையும் சந்தித்து ஆசி பெற்றார். அதோடு, நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனிடனும் நேரில் சென்று ஆசி பெற்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *