செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு | Orders reserved in Senthil Balaji case: High Court

1355187.jpg
Spread the love

சென்னை: வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடமும் பணமோசடியில் ஈடுபட்டதாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைகளை ஒன்றாக சேர்த்து சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதை எதிர்த்து ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என். சுப்பிரமணியன், “போக்குவரத்து கழகங்களில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்படும் என உத்தரவிட சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை. இந்த வழக்கில் 2 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணை முடிவதற்கே பல ஆண்டுகளாகி விடும். எனவே ஒன்றாக விசாரிக்கப்படும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,” என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை விசாரித்து போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி மேல் விசாரணை நடத்தி கூடுதலாக 4 துணை கூடுதல் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றப்பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஒரே விதமானவை என்பதால் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் போலீஸாரின் பங்கு எதுவும் இல்லை. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்துக்கும் அறிக்கை அனுப்பியுள்ளது. அதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை குறைவான வழக்குகள் கொண்ட சிறப்பு நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது,” என்றார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.கார்த்திக், “இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இந்த வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டுமென குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும் கோரவில்லை. இது நீதிமன்றத்தின் முடிவு. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்,” என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *