சென்னை: “அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைக்கு லஞ்சம் வாங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வேலை வாய்ப்பில் ஊழல் செய்த கே.என்.நேருவையும் உச்சி முகர்வாரா முதல்வர். இல்லை உரிய நடவடிக்கை எடுப்பாரா?.” என்று வினவி தவெக கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருன்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் விவரம் வருமாறு: அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநர், ஓட்டுநர் உள்ளிட்டப் பணியிடங்களுக்கு தேர்வு எழுதி தகுதியானவர்கள் பலர் இருந்தாலும், லஞ்சம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளித்ததால்… தகுதி வாய்ந்த பல்வேறு இளைஞர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியானது. இது குறித்த வழக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மறுத்து, பணம் கொடுத்தவர்களுக்கே வேலை என்ற லஞ்ச வேட்டை, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ‘தகிடு தத்த மாடல்’ அரசின் இன்னொரு முக்கிய துறையிலும் அரங்கேறி இருக்கிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கையால் பணி ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில், இதில் சுமார் 150 பணியிடங்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்க பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அமலாக்கத் துறை தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது இது தொடர்பான ஆவணங்கள் கிடைத்ததாகவும் கூறியுள்ளது அமலாக்கத் துறை.
ஏற்கெனவே தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பறித்த செந்தில் பாலாஜியை உச்சி முகர்ந்து மெச்சிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின். இப்போது அதே வழியில் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் லஞ்சம் கொடுத்தவர்களுக்கே வேலை என்று செயல்பட்டிருக்கிற கே.என்.நேருவையும் உச்சி முகர்வாரா?.
ஸ்டாலினின் ஊழல் மாடல் அரசு அமலாக்கத் துறையின் கடிதத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? மாநில உரிமை என்ற உருட்டுகளை விரித்து தன் ஊழலை மூடி மறைப்பாரா? அல்லது தைரியமாக வழக்குப் பதிவு செய்து விசாரிப்பாரா?
தமிழக காவல்துறை இவ்வழக்கில் எப்போது FIR பதிவு செய்வார்கள்? அவ்வாறு பதிவு செய்தாலும் தகுந்த குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்படுமா? தமிழக மக்கள் விழிப்போடு கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் முதல்வரே!. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.