ஆப்பிரிக்க நாடுகளில், பிரான்ஸின் செல்வாக்குக் குறைந்து வரும் சூழலில், அதன் கடைசி மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் இருந்து பிரன்ஸ் படைகள் முற்றிலும் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்காவிலுள்ள அதன் முந்தைய காலனி நாடுகளில், பிரான்ஸ் தனது ராணுவப் படைகளை நிரந்தரமாக நிலைநிறுத்தியிருந்தது. இத்தகையச் சூழலில், கடந்த சில காலமாக அதற்கு ஆப்பிரிக்க நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், செனகல் நாட்டில், பிரான்ஸ் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மிகப் பெரிய ராணுவ தளமான, கேம்ப் கெயிலியை அந்நாட்டு அரசிடம் இன்று (ஜூலை 17) ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் முதல் 3 மாதங்களாக நடைபெற்று வந்த பிரான்ஸ் படைகள் திரும்பப் பெறும் பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன.
இதுகுறித்து, ஆப்பிரிக்கவிலுள்ள பிரான்ஸ் படைகளின் தலைவர் ஜெனரல் பாஸ்கல் இயான்னி கூறுகையில், மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தங்களது படைகளை நிரந்திரமாகத் திரும்பப் பெறும் பிரான்ஸ் அரசின் திட்டத்தின்படியும், செனகல் அரசின் வலியுறுத்தல்களை ஏற்றும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ளார்.