சென்னைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவில் ‘மோந்தா’ புயல் மையம் | Meteorological Department warning over weather report

Spread the love

சென்னை: சென்னைக்கு கிழக்கே 480 கிலோமீட்டர் தொலைவில் ‘மோந்தா’ புயல் மையம் கொண்டுள்ளது. நாளை (அக்.28) மாலை முதல், இரவுக்குள் தீவிர புயலாக ‘மோந்தா’ கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பி.அமுதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாளை (அக்.28) காலை தீவிரப் புயலாக வலுப்பெற்று, மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிகளில், அதாவது மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கக் கூடும்.

குறிப்பாக, நாளை மாலை முதல், இரவுக்குள் தீவிர புயலாக ‘மோந்தா’ கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே 110 கி.மீ வேகத்திலும் வீசக் கூடும். இப்போது, சென்னைக்கு கிழக்கே 480 கிலோமீட்டர் தொலைவில் ‘மோந்தா’ புயல் மையம் கொண்டுள்ளது.

தமிழகத்தில் அக்.1 முதல் இன்று வரை இயல்பில் இருந்து 57 சதவீதம் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் நாளை தரைக் காற்றின் வேகம் சிறிது உயர வாய்ப்புள்ளது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இன்று (அக்.27) முதல் 29-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்.

இன்று (அக்.27) தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதனான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தரைக்காற்று 30-லிருந்து 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

நாளை (அக்.28) ஆம் தேதி ஓரிரு இடங்களில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இயல்பாக 144 மி.மீ மழை பதிவாகும். ஆனால் இந்தாண்டு 227 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

நாளை திருவள்ளூர் மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *