சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல்: மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்த திட்டம்- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்  – Kumudam

Spread the love

சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை (30ம் தேதி) அதிகாலையில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் கரை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரமாக 7 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி புயல் நகர்ந்து வருகிறது. நாளை அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை அருகே வங்கக்கடலை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே வி கே சாமி நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி வருவதால் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், மேற்கு காமராஜ் நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அத்யாவசிய தேவைக்குக் கூட வெளியே வர முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

செம்பரபாக்கம், பூண்டியில் நீர் திறப்பு 

24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 21.72 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 100 கன அடியாக உள்ளது. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்தால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து விநாடிக்கு 1200 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து 2500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யக்கூடிய முக்கிய நீர்த்தேக்கங்களின் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் பூண்டி நீர்த்தேக்கத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக திருவள்ளுர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஹெலிகாப்டர் பயன்படுத்த திட்டம் 

டிட்வா புயல் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனையில் ஈடுபட்ட பின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டிட்வா புயலால் இதுவரை பெரிய பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ கிடையாது.

மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களின் உதவியை நாடவும் அறிவுறுத்தி இருக்கிறோம். காற்றோடு மழை பெய்யும் போது பாதிப்புகள் இருக்கக்கூடும். படகு, பயிர்கள் சேதம் தொடர்பாக 30-ந்தேதிக்கு பிறகு கணக்கெடுத்து இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சரும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

ஒரு கோடியே 24 லட்சம் பேருக்கு புயல் முன்னெச்சரிக்கை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரத்திற்கு பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் எங்கு கரையை கடக்கும் என தற்போது வரை தெரியவில்லை. அதிக அளவு பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்த மத்திய அரசின் உதவியை நாடி உள்ளோம். என்றார். 

கடல் சீற்றம், நீரில் மூழ்கிய பயிர்கள் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொள்ளிடம், புத்தூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, பூம்புகார், பழையாறு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முதல் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் கடுமையான நாகையில் கடல் சீற்றம் உள்ளது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குருங்குளம், ஒரத்தநாடு, நெய்வாசல்தென்பாதி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டின், மதுக்கூர், பேராவூரணி என மாவட்டத்தின அனைத்து இடங்களிலும் இடைவிடாமல் விடிய விடிய மழை பெய்தது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்சம்பா,தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. அதிராம்பட்டினம் கடற்கரையில் புயலால் பலத்த காற்று வீசியப்படி கனமழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *