இந்திய விமானப்படையின் நிறுவன தினம் சென்னையில் கொண்டாடப்படவுள்ளது.
1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படை நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் விமானப்படையின் நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய விமானப்படையின் நிறுவன தினக் கொண்டாட்டங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தும் பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு, 92 ஆவது ஆண்டு விமானப்படை தின அணிவகுப்பு மற்றும் விமான கண்காட்சி, அக்டோபர் 8 ஆம் தேதியில் தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கு முந்தைய கொண்டாட்டங்கள் சண்டிகர் மற்றும் பிரயாக்ராஜில் நடைபெற்றன.
கொண்டாட்டத்தின்போது, இந்திய விமானப்படை அணிவகுப்பு, சென்னையில் காலை 7.45 மணியளவில் தொடங்கும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் ஒரு பிரமாண்டமான விமானக் கண்காட்சி நடைபெறும்.