சென்னை: அரசு முறை பயணமாக தமிழகம் வந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி சென்னை பெசன்ட் நகரில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து நடைபயிற்சி மேற்கொண்டார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி அரசு முறை பயணமாக தமிழகம் வந்துள்ளார். சென்னை வந்த அவர் தொழில்துறை முதலீடுகள் தொடர்பாக நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் சென்னை பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெல்த் வாக் 8 கி.மீ தடத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுடன் இணைந்து நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர், செல்பி எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக, அமீரக அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி கூறுகையில், “வர்த்தக மேம்பாட்டு பணிகளுக்காக தமிழகம் வந்துள்ளேன். அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறந்த ஓட்டப்பந்தய வீரர். அவருடன் இணைந்து நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளேன். நடைபயிற்சி உடலுக்கு மிகவும் சிறந்தது” என்றார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்துறை அமைச்சர் கடந்த 22-ம் தேதி தமிழகம் வந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் சந்தித்து தொழில் துறைகள் மற்றும் தொழில்சார்ந்த ஒப்பந்தங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். அவருடன் 50-க்கும் மேற்பட்ட தொழில் முதலீட்டாளர்களும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளும் வந்துள்ளனர். தொழில் துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக அவர் தமிழகம் வந்துள்ளார். அவரிடம் முதல்வரின் அறிவுரைப்படி, ஹெல்த் வாக் திட்டம் 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தோம். அவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் நண்பர்களுடன் அதிகாலையில் நடைபயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் பெசன்ட் நகர் பகுதியில் இருந்து கடற்கரை வரை நடைபயிற்சி மேற்கொண்டோம்” என்றார். அங்கு வந்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர்நிலை குழுவுடன், தொழில்துறையை மேம்படுத்துவது குறித்து இன்று (நேற்று) ஆலோசனை நடைபெறுகிறது. அதன் பின்னர் எவ்வளவு முதலீடுகள் வரும் என்பது தெரியும்” என்றார்.