சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவச உணவு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | Free food at Amma Unavagam in Chennai today – CM Stalin orders

1341652.jpg
Spread the love

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மிக அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும். கடற்கரை பகுதிகளுக்கு புயலை வேடிக்கை பார்க்க எக்காரணத்தை கொண்டும் செல்ல வேண்டாம் என்று அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை, எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.30) நேரில் சென்று, “ஃபெஞ்சல்” புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கும் இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இன்று (நவ.30) காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இன்று (நவ.30) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாகவும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருடனும் தமிழக முதல்வர் மழை விபரம், முகாம்கள் விபரம், தண்ணீர் வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து தக்க அறிவுரைகள் வழங்கினார்.

புயல் மற்றும் மழையினால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் நபர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.

மழை நீர் தேங்கும் இடங்களில், உடனடியாக மழை நீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், புயலின் காரணமாக மரங்கள் விழுந்தால் அதனை உடனே அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,

மின் கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

மழைக் காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மருத்துவ முகாம்களை நடத்தவும், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளுடன் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கவும் தமிழக முதல்வர் அறிவுறுத்தினார்.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள நிவாரண மைய கட்டடங்கள் அனைத்து வசதிகளுடன் தயாராக உள்ளன. தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 5 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர்.சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறைகளுக்கு பொதுமக்களிடமிருந்து தொலைபேசி வாயிலாக பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வர் அறிவுறுத்தினார். மேலும், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் முத்தமிழ் மன்ற நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் காணொலி வாயிலாக பேசிய முதல்வர், அவர்களிடம் அங்கு செய்து தரப்பட்டுள்ள உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

கனமழை எச்சரிக்கை வரப்பெற்ற செங்கல்பட்டு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தலா 3 குழுக்களும், கடலூர், தஞ்சாவூர், திருவாருர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 2 குழுக்களும் ஆக மொத்தம் 18 பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் மிக அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கடற்கரை பகுதிகளுக்கு புயலை வேடிக்கை பார்க்க எக்காரணத்தை கொண்டும் செல்லக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அரசு மேற்கொண்டு வரும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் பெ. அமுதா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *