சென்னை: சென்னையில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.40 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி சென்னை காரம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: உணவு, உடை, இருப்பிடம் இவை 3-ம்தான் ஒவ்வொரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள். இதில் உடை, உணவு எல்லோருக்கும் கிடைத்துவிடும். ஆனால், குடியிருக்கும் இடம் பட்டாவுடன் வேண்டும் என்பதுதான் இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை.
வீட்டுக்குப் பட்டா இல்லை என்றால், அதனால் ஏற்படும் வேதனையைப் பட்டியலிட முடியாது. மின் இணைப்பு வாங்க முடியாது. தண்ணீர் இணைப்பு அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது. வங்கிக் கடன் கிடைப்பது கடினம். எப்போது யார் வந்து இடத்தைக் காலி செய்யச் சொல்வார்களோ என்ற பதற்றம் கூடுதலாக இருக்கும்.
எனவே, சென்னை மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு உடனடியாகப் பட்டா வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். இதற்காக வருவாய்த் துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி கடந்த ஒராண்டில் மட்டும் சென்னை மாவட்டத்தில் 1.40 லட்சம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகம் முழுவதும் 19 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பல முற்போக்கான திட்டங்களின் மூலம், இந்தியாவிலேயே நம்முடைய மாநிலம் 11.19 சதவீத வளர்ச்சியோடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
இதனால் திமுக அரசுக்கு ஒவ்வொரு நாளும் மக்களுடைய அன்பும், ஆதரவும் பெருகிக்கொண்டிருக்கிறது. அரசைத் தேடி மக்கள் வரவேண்டும் என்ற நிலைமையை மாற்றி, இன்றைக்கு மக்களைத் தேடி அரசு வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், வருவாய்த் துறை செயலர் பெ.அமுதா, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் கணேசன், மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.