சென்னையில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா? – அரசுக்கு அன்புமணி கேள்வி | Anbumani questions the government over morning breakfast scheme

1348546.jpg
Spread the love

சென்னை: சென்னையில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா என்றும் அந்தந்த பள்ளிகளில் தயாரித்து மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிமாறப்படும் காலை உணவை தயாரித்து வழங்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதற்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன்களுக்கு எதிரான திமுக அரசின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கான காலை உணவை இப்போது அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்து வழங்குகின்றனர். அதனால், குழந்தைகளுக்கு ஓரளவு தாமதமின்றி மாணவர்களுக்கு உணவு கிடைக்கிறது. இந்தத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் சத்துணவு தயாரிக்கப்படுவதைப் போல பள்ளிகளிலேயே காலை உணவையும் தயாரித்து வழங்குவது தான் சரியானதாக இருக்கும். அதற்கு மாறாக இந்தப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் அது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

சென்னையில் 356 பள்ளிகளுக்கு காலை உணவு தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் 3 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன. அவை மொத்தம் 35 மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்களில் காலை உணவை தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, சராசரியாக 11 பள்ளிகளுக்கு ஓர் இடத்தில் உணவு தயாரிக்கப்பட்டால், அதை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கொண்டு சென்று சேர்க்க குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். அதனால் குழந்தைகளுக்கு சரியான நேரத்திலும், சூடாகவும் உணவு கிடைக்காத நிலை உருவாகும். இது காலை உணவுத் திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும்.

காலை உணவை தயாரிக்கும் பணியை தனியாரிடம் வழங்க கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை மாநகராட்சி முடிவு செய்த போது அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது. ஆனால், எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல், ஏற்கெனவே கைவிடப்பட்ட ஒரு திட்டத்தை சென்னை மாநகராட்சி அவசர, அவசரமாக செயல்படுத்தத் துடிப்பதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

காலை உணவுத் திட்டத்தின் நோக்கமே மாணவர்களுக்கு சரியான நேரத்தில் சூடான உணவு கிடைக்க வேண்டும் என்பது தான். அதை உறுதி செய்யும் வகையில் காலை உணவுத் தயாரிப்பை தனியாரிடம் விடும் திட்டத்தை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் கைவிட வேண்டும். மாறாக, அனைத்துப் பள்ளிகளிலும் சத்துணவுத் திட்டத்திற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடங்களில் காலை உணவை தயாரித்து வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *