சென்னை: சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளா்கள் கடந்த 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தநிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன் சாலையோரம் தூய்மைப் பணியாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டம் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது; பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தப் போராட்டத்தை சட்டவிரோதம் என அறிவித்து தூய்மைப் பணியாளா்களை அங்கிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆக. 13 நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், நடைபாதையை மறைத்து யாரும் போராடக் கூடாது. நடைபாதையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த போலீஸாா் யாரையும் அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆக. 13 – 14 நள்ளிரவில் தொடர்ந்து சாலையோரம் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீஸார் குண்டுக்கட்டாக பேருந்துகளில் ஏற்றி வேறு இடத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை ரிப்பன் மாளிகை அருகே நள்ளிரவில் பரபரப்பான சூழல் நிலவியது.