சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் பல்வேறு மார்க்கங்களில் நாளை முதல் 25 ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது. 40-க்கும் மேற்பட்ட ரயில்களின் எண்கள் மாற்றப்படுகின்றன.
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை இன்று (ஜன.1) அமலுக்கு வருகிறது. சில மெயில், விரைவு ரயில்களின் நேர மாற்றம் இதில் இடம்பெறுகிறது. இதையடுத்து, பயணிகள் வசதிக்காகவும், இயக்க காரணங்களுக்காகவும் சென்னை ரயில்வே கோட்டத்தில் சில மார்க்கங்களில் புறநகர் மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல் – திருத்தணி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு உள்ளிட்ட மார்க்கங்களில் குறிப்பிட்ட சில ரயில்களின் நேரம், ரயில் எண்கள் மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த மாற்றம் நாளை (ஜன.2) முதல் அமலுக்கு வர உள்ளது. வார நாட்களில் மட்டும் நேரம் மாற்றப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மாற்றம் இல்லை. அதன் விவரம்:
சென்னை சென்ட்ரல் – திருத்தணி காலை 7.25 மணி ரயில் ஆவடியில் காலை 8.10 மணிக்கும், சென்ட்ரல் – திருவள்ளூர் காலை 7.35 மணி ரயில், ஆவடியில் காலை 8.15 மணிக்கும் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் – திருத்தணி இரவு 8.10 மணி ரயில், கடற்கரை – திருவள்ளூர் இரவு 8.15 மணி ரயில், சென்ட்ரல் – அரக்கோணம் இரவு 9.10 மணி ரயில் ஆகியவற்றின் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.
கடற்கரை – ஆவடி இரவு 9 மணி ரயில், சென்ட்ரல் – பட்டாபிராம் இரவு 10.40 மணி ரயில், கடற்கரை – ஆவடி இரவு 10.10 மணி ரயில் ஆகியவற்றின் எண் மாற்றப்படுகிறது. திருத்தணி – சென்ட்ரல் மார்க்கத்தில் 6 ரயில்களின் நேரம், எண் மாற்றம் செய்யப்பட உள்ளது.
கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் 15 ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது. கடற்கரை – தாம்பரம் காலை 6.01 மணி, காலை 10.01 மணி ரயில், கடற்கரை – செங்கல்பட்டு மாலை 5.55 மணி ரயில் ஆகியவற்றின் நேரம் மாற்றப்படுகிறது.
கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – திருமால்பூர் – அரக்கோணம் மார்க்கத்தில் 22 ரயில்களின் நேரம், எண் மாற்றப்படுகிறது. ஆவடி – சூலூர்பேட்டை மார்க்கம் (வழி: கும்மிடிப்பூண்டி), கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. அந்த வகையில், மொத்தம் 25 ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது. 40-க்கும் மேற்பட்ட ரயில்களின் எண்கள் மாற்றப்படுகின்றன. சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.