சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அவ்வப்போது இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று (ஜூலை 12) சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இரவு 8.30 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. அண்ணா நகர், கோயம்பேடு, கிண்டி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, பூவிருந்தவல்லி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
அதே போல தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்று கடுமையாக வீசியதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாள் என்பதால் சென்னை அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட இடங்களில் வழக்கம்போல கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இத்துடன் மழையும் காற்றும் சேர்ந்து கொண்டதால் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.