சென்னையில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு 7 பயிற்சிகள் விரைவில் தொடக்கம் | 7 Trainings for Visually Impaired will Start Soon

1343386.jpg
Spread the love

சென்னை: பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட புக் பைண்டிங் பயிற்சி உட்பட மேலும் புதிதாக 7 பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் ஆண்டு தோறும் 21 பேருக்கு புக் பைண்டிங் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ‘நூலகங்கள் கணினிமயம் ஆகிவிட்டதால் புக் பைண்டிங் பயிற்சி முடிக்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை’ என்று கூறி அந்த படிப்பை தமிழக அரசு திடீரென நிறுத்திவிட்டது.

ஆனால், புக் பைண்டிங் பயிற்சியை முடிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால், நடப்பு கல்வி ஆண்டில் புக் பைண்டிங் பயிற்சியை மீண்டும் தொடங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு ப்ளீடர் ஏ.எட்வின் பிரபாகர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை இயக்குநர் லட்சுமி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘புக் பைண்டிங் பயிற்சியை வரும் கல்வி ஆண்டு முதல் நிறுத்துவதாக அறிவித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை திரும்ப பெறப்பட்டுவிட்டது. பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக புக் பைண்டிங் பயிற்சியுடன் மேலும் 7 புதிய பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *